Sunday, September 9, 2007

Romance At Its Best-II

மேற்கூறிய ஆதி மனிதனையும் ஆதி ஸ்திரீயையும் ஒத்திருந்தார்கள் அந்த நேரத்தில் நம் வல்லவரையனும் குந்தவை தேவியும். இப்பூவுலகில் தாங்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்த நிமிஷத்துக்காகவே,- இந்தச் சந்திப்புக்காகவே, - என்பதை அவர்களுடைய உள்ளுணர்ச்சி உணர்த்தியது. ஆனால் ஆதி மனிதனையும் ஆதி ஸ்திரீயையும் போலின்றி இவர்கள் நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் அல்லவா? ஆகையால் தங்களுடைய பரஸ்பர அந்தஸ்தில் இருந்த வேற்றுமையை அவர்களால் மறக்க முடியவில்லை. முழுதும் உணர்ச்சி வசப்பட்டு மனத்தைக் கட்டுக்கடங்காமல் அவர்கள் விட்டுவிடவில்லை. ஒரு கணம் ஒருவரையருவர் பார்த்துக் கண்ணோடு கண் சேர்வதும், அடுத்த கணத்தில் தங்கள் கண்களைத் திருப்பி அக்கம் பக்கத்திலிருந்த பூ, மரம், பட்டுப் பூச்சி, ஓடை முதலியவற்றைப் பார்ப்பதுமாயிருந்தார்கள்.


Fitting this description, Artist Maniyam Selvan has painted, the Most beautiful Romance in a delicate and mystical way like this.



ஈசான சிவபட்டர் தொண்டையைக் கனைத்த பிறகுதான் இருவரும் ஏதோ ஒரு முக்கியமான காரியம் பற்றி இங்கே சந்திக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டார்கள்.

"நீர் என்னைத் தனிமையில் பார்க்க வேண்டுமென்று ஈசான பட்டரிடம் தெரிவித்தது உண்மையா?" என்று குரலைக் கடுமைப்படுத்திக் கொண்டு இளையபிராட்டி வினவினாள்.

அந்தக் குரலின் கடுமையும் அதிகார தோரணையும் வந்தியத்தேவனை நிமிர்ந்து நிற்கச் செய்தன.

"தாங்கள் யார் என்று தெரிந்தால் அல்லவா தங்களது கேள்விக்கு விடை சொல்லலாம்? ஈசான பட்டர் என்னைத் தவறான இடத்துக்கு அழைத்து வந்து விட்டாரோ என்று ஐயுறுகிறேன்!" என்றான் அந்த வீர வாலிபன்.

"எனக்கும் அவ்வித சந்தேகம் உண்டாகிறது. நீர் யாரைப் பார்க்க விரும்பினீர்?"

"சோழர் தொல்குலத்தின் மங்காமணி விளக்கை, சுந்தர சோழ மன்னரின் செல்வத் திருமகளை, ஆதித்த கரிகாலருக்குப் பின் பிறந்த சகோதரியை, அருள்மொழிவர்மரின் அருமைத் தமக்கையை, இளையபிராட்டி குந்தவை தேவியைப் பார்க்க வேண்டுமென்று ஈசான சிவபட்டரிடம் சொன்னேன்......"

குந்தவைப் பிராட்டி புன்னகை பூத்து, "அவ்வளவு பெருமையையும் தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டிருப்பவள் நான் தான்!" என்றாள்.

"அப்படியானால் குடந்தை ஜோதிடர் வீட்டிலும் அரிசிலாற்றங்கரையிலும் நான் பார்த்த நாரீமணி தாங்கள் இல்லைதானே?" என்றான் வல்லவரையன்.

"ஆமாம், ஆமாம்! அந்த இரண்டு இடத்திலும் அவ்வளவு மரியாதைக் குறைவாகத் தங்களிடம் நடந்து கொண்டவளும் நானேதான். அந்த நாகரிகமில்லா மங்கையை மறுபடியும் இவ்வளவு சீக்கிரத்தில் சந்திப்போம் என்று எதிர்ப்பார்த்திருக்க மாட்டீர்!"

"மறுபடியும் சந்திப்பதாகச் சொல்வது பொருத்தமில்லை, தேவி!"

"ஏன்?"

"விட்டுப் பிரிந்திருந்தால் அல்லவா மறுபடியும் சந்திப்பதாகச் சொல்லலாம்? தாங்கள் என் மனத்தை விட்டு ஒரு கணமும் அகலவில்லை......."

"தொண்டை மண்டலத்தார் இவ்வளவு சமத்காரமாகப் பேசுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை."

"எல்லாப் பெருமையையும் சோழ நாட்டிற்கேதான் கொடுப்பீர்களாக்கும். வேறு நாடுகளுக்கு ஒரு பெருமையும் தர மாட்டீர்கள் போலிருக்கிறது."

"ஆம்; என்னிடம் அந்தக் குற்றம் இருப்பது உண்மைதான். உமக்கு எங்கள் சோழ நாட்டைப் பிடிக்கவில்லையாக்கும்!"

"பிடிக்காமல் என்ன? நன்றாய்ப் பிடித்திருக்கிறது. ஆனால் இச்சோழ நாட்டில் இரண்டு பெரும் அபாயங்கள் இருக்கின்றன. அவற்றை எண்ணினாலே எனக்குப் பயமாயிருக்கிறது.....!"

"சோழ நாட்டு வீரர்களின் வாளும் வேலும் அபாயகரமான ஆயுதங்கள் தான்! அயல் நாட்டவர்கள் இங்கே ஜாக்கிரதையாகவே வர வேண்டும். முக்கியமாக, ஒற்றர் வேலை செய்வதற்கென்று வருவோர்....."

"இளவரசி! அந்த இரு அபாயங்களை நான் குறிப்பிடவில்லை. வாளும் வேலும் என்னிடமும் இருக்கின்றன. அவற்றை உபயோகிப்பதற்கும் நான் நன்கு அறிவேன்......."

"உமது வேலின் வன்மையைத்தான் அரிசிலாற்றங்கரையில் அன்று பார்த்தேனே? செத்துப் போன முதலையை உமது வேல் எத்தனை வேகமாய்த் தாக்கியது? ஒரே தாக்குதலில் உள்ளே அடைந்திருந்த பஞ்சையெல்லாம் வெளிக் கொண்டு வந்து விட்டதே?"

"அம்மணி! சோழ நாட்டு மாதரசிகள் செத்த முதலையைக் கண்டு பயந்து சாகும் வீர நாரீமணிகள் என்பதை நான் அறியேன். சோழ நாட்டு வீரர்கள் செத்த முதலையைத் தாக்கும் சுத்த வீரர்கள் என்றும் எனக்குத் தெரியாது. உயிருள்ள முதலையாக்கும் என்று எண்ணி வேலை எறிந்தேன். அது என் தவறும் அன்று; என் வேலின் தவறும் அன்று!......"

"அந்த அசட்டு முதலையின் தவறுதான்! வாணர் குலத்தில் பிறந்த வீர வந்தியத்தேவர் வேலோடு வரும் வரையில் காத்துக் கொண்டிராமல் முன்னதாகவே செத்துப் போய்விட்டதல்லவா? அதற்கு நன்றாய் வேணும் இந்த அவமானம்...! வேறு எந்த இரு அபாயங்களைப் பற்றிச் சொன்னீர்?"

"இந்தச் சோழ நாட்டு நதிகளில் புது வெள்ளம் வரும்போது உண்டாகும் சுழல்கள் அபாயமானவை! அவற்றை ஒரு போதும் நம்பவே கூடாது. என்னைத் திண்டாடித் திணறும்படி செய்து விட்டன!"

"வெள்ளச் சூழலில் நீர் எப்படி அகப்பட்டுக் கொண்டீர்? தண்ணீரில் காலையே வைக்க மாட்டீர் என்றல்லவா உம்மைப் பார்த்தால் தோன்றுகிறது?"

No comments: